Sunday, January 20, 2008

பாதுகாப்பு அடிப்படை

முன்பே சொன்ன மாதிரி, தகவல் (டேடா) என்பது பணத்தையும் விட பல மடங்கு மதிப்பு வாய்ந்தது. எனவே, அதனை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியம். ஏனெனில், எப்பொழுது தகவல் என்பது பணத்தை விட மதிப்பு வய்ந்தது ஆனதோ, அப்போதே அதனை கவர்ந்து செல்ல பல பேர் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். முக்கியமாக போட்டியாளர்கள், தீய எண்ணம் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் (ஹேக்கர்), மதிப்பு குறை மற்றும் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் பலர் இந்த முக்கியமான தகவலை அழிக்கவோ அல்லது கவர்ந்து செல்லவோ முயற்சி செய்கின்றனர். இவர்களிடமிருந்து தகவலை (டேடாவை) பாதுகாப்பது மிக முக்கியமானது.

தகவல் தொழில் நுட்ப பாதுகாப்பு என்பது மூன்று முக்கியமான கருத்துக்களை அடிப்படையாக கொண்டது.

1. இரகசியத் தன்மை (கான்ஃபிடென்சியாலிடி)
2. உண்மைத் தன்மை(இன்டெகிரிடி)
3. உபயோயகத் தன்மை(அவெய்லபிலிடி)

இன்னும் சற்று விவரமாக பார்க்கலாம்.

1. இரகசியத் தன்மை (கான்ஃபிடென்சியாலிடி) - தகவலை யார் அறிந்து கொள்ளவேண்டுமோ, அவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, அடுத்த கட்ட போர் நடவடிக்கைகள் தலைமை தளபதிக்கும் மற்ற தேவையான தளபதிகளுக்கு மட்டுமே தெரிய வேண்டும். எதிரிகளுக்கு தெரியாமல், அதன் இரகசியத் தன்மை காக்கப் பட வேண்டும். நீங்கள் ஆன்லைனில் (இன்டெர்னெட்டில்) உங்கள் கடன் அட்டயை (கிரெடிட் கார்டு) பயன் படுத்தி எதை வேண்டுமானாலும் வாங்கலாம். உங்கள் கடன்அட்டை(கிரெடிட் கார்டு) தகவலின் இரகசியத் தன்மையை பாதுகாக்க வேண்டியது, நீங்கள் பயன்படுத்திய அந்த வெப் சைட்டின் கடமை. அந்த கடன்அட்டை(கிரெடிட் கார்டு) தகவல் வேறு யாருக்காவது கிடைக்கும் பட்சத்தில், அவர்கள் உங்கள் கணக்கில், தேவையானதை வாங்கி கொள்வர்கள்.

2. உண்மைத் தன்மை(இன்டெகிரிடி) - உருவான தகவலை எந்த வித அனுமதிக்க படாத மாற்றங்களுக்கும் உட்படாமல் பாதுகாப்பது. உதாரணத்திற்கு, நீங்கள் 1000 ரூபாய்க்கு காசோலை (செக்) தருகிறீர்கள். அதனை, மற்றவர் 1,00,000 என்று மாற்றிவிட கூடாது. இதே போல், நீங்கள் 1000 ரூபாய்க்கு ஆன்லைன் பண மாற்றத்தின் போது, அதன் மதிப்பு 1,00,00,000 என்று மாறிவிடக்கூடாது. தகவலின் உண்மைத் தன்மை(இன்டெகிரிடி) பாதுகாக்க பட வேண்டும்.

3. உபயோயகத் தன்மை(அவெய்லபிலிடி) - தகவல் உங்களுக்கு தேவையான போது கிடைக்க வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுடைய வங்கியின் வெப்சைட், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான போது கிடைக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் உங்கள் வாடிக்கையாளரை இழக்க நேரிடும்.

தகவல் தொகுப்பு (டேடா பேஸ்) என்பதை மன்னர் காலத்து கருவூலத்திற்கு (கஜானா) இணையாக கருதலாம். அதனை எப்படி பாதுகாப்பது என்று இன்னொரு முறை பார்க்கலாம்.

2 comments:

ஆளவந்தான் said...

hey,

Information = தகவல்
Data = குறியீடு ?

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

நண்பரே,

தங்கள் வருகைக்கு நன்றி.
Symbol - குறியீடு என்பது எனது கணிப்பு. சில சமயங்களில், குறியீடு என்பது பிறருக்கு புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பொதுவாக, தகவலின் சேமிப்பு வடிவமே data என்பது எனது கருத்து.